தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 17ம் தேதி கவுன்சிலிங்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நாளை முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

தொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் கவுன்சிலிங், இணையதளம் மூலமாக நாளை காலை 9 மணிக்கு கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், தொடக்கக் கல்வி இயக்குனர் முன்னிலையில் நடக்கிறது. இதன் அடிப்படையில் மற்ற மாவட்டங்களில் 20ம் தேதி முதல் கவுன்சிலிங் நடக்கவுள்ளது. மற்ற மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் 25ம் தேதி நடைபெறும்.

காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்ட ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. 20ம் தேதி காலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி, தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடைபெறும். 21ம் தேதி காலையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கும், பிற்பகலில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளி 6, 7, 8, வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் நடைபெறும்.

வரும் 24ம் தேதி காலையில், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். 25ம் தேதி காலையில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அந்தந்த மாவட்ட கவுன்சிலிங் மையங்களில் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||