ஆடைதரும் உறவு

நம்முடைய வாழ்க்கையில் உடல் தூய்மையும், உள்ளத்தூய்மையும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை நம்முடைய வெளித்தோற்றமே காட்டிவிடும்.

உள்ளம் தெளிவாக இருப்பின் உடலின் தோற்றமும் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். நல்ல உடை நம்முடைய ஒழுக்கம் பண்பு செயல்திறன், புத்துணர்ச்சி ஆகியவற்றை நிச்சயமாக உருவாக்கித் தரும்.

அழகாக ஆடை, அணிந்த பின்பு அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க முடியாது. துடிப்பாகச் செயலைச் செய்ய மனம் தூண்டுதல் செய்யும். சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். மனம் தெளிவுடன் இருக்கும்.

இங்கு இயங்கும் தன்மை தான் செயலை வெற்றிகரமாக அமைக்க வழிவகுக்கும். உன்னுடைய தோற்றமே உன் வருங்காலத்தை முடிவு செய்கிறது என்கிறார் எல்லன் ஹாப்பர் என்ற அறிஞர்.

நம்முடைய தோற்றத்தைப் பார்த்து தான் மற்றவர்கள் மதிப்பீடு செய்வார்கள். இந்த மதிப்பீடு தான் நம்முடன் நட்புறவு கொள்ளவும் தொழில் துறையில் இணைந்து பணியாற்றவும், பொருள் உதவி செய்யவும் உதவி செய்யும் துணை புரியும்.

நம்முடைய தோற்றம் சரியாக இல்லா விட்டால் யாரும் நம்முடன் தொடர்பும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஜெர்மனியில் புகழ் பெற்ற அறிஞராக இருந்தவர் ஹொ ரோஸ். இவர் வீட்டிற்கு வந்தவுடன் நல்ல ஆடைகளைக் களைந்துவிட்டு மிகவும் எளிய ஆடைகளை அணிந்து கொள்வார்.

தான் வளர்த்து வந்த பறவைகளுக்காக தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் புழுக்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

அந்த வழியே சென்ற ஒருவர் இவருடைய செயலைப் பார்த்து இவர் ஒரு பிச்சைக்காரர் போலும். எச்சில் உணவைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு அறிஞரிடம் சில நாணயங்களைக் கொடுத்தார்.

அறிஞரைப் பிச்சைக்காரன் என்று எண்ண வைத்தது அவருடைய தோற்றம் தானே! அதனால் நம்முடைய தகுதிக்கேற்ப நல்ல உடைகளை அணிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

நாடகத்தில் அரசராக நடிப்பவர் அரசரைப் போன்றே ஆடை அணிய வேண்டும் அல்லவா? ஆண்டியை போல ஆடை அணிந்தால் அவரை அரசராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இல்லையா!

இதே போன்று உலகமாகிய நாடக மேடையில் நாம் ஒவ்வொருவரும் விதவிதமான பாகத்தை கொண்டிருக்கிறோம். அதற்கு ஏற்றவாறு நம்முடைய உடை இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.

நீதி மன்றம் என்பது எல்லோருக்கும் நீதி வழங்கும் இடம். நீதிபதிகளும் வழக்கறிஞர் அங்கு கம்பீரமாக வீற்றிருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
நீதி என்பது உயர்வானது அதனை வழங்குபவர்களும் உயர்வானவர்களாக உன்னதமானவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எளிய தன்மையுடன் இருப்பதாக நாமே எண்ணிக் கொண்டு பிறரை ஏமாற்றக் கூடாது.

ஹட்சன் என்ற காரை உற்பத்தி செய்யும் தொழில் அதிபரைச் சந்திக்க ஒரு செல்வந்தர் அழைத்து வரப்பட்டார். அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் அந்த செல்வந்தர் பல கோடிகளுக்கு அதிபதி என்று கூறினார்கள்.

ஆனால் அந்த செல்வந்தர் மிகவும் எளிய உடையை அணிந்து வந்தார். இவரை பார்த்த ஹட்சன் கார் முதலாளி, அவருடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன்னுடைய தொழிற்சாலைக்குப் போய்விட்டார்.

அவரிடம் சென்று ஏன் செல்வந்தரிடம் பேசாமல் போய்விட்டீர்கள் என்று கேட்டனர். அந்தச் செல்வந்தர் தன்னுடைய தகுதிக்குத் தக்கபடி உடை அணிந்து வரவில்லை.

இப்படி அவர் போலி வேடம் போட்டு தன்னையே ஏமாற்றிக் கொள்வதோடு பிறரையும் ஏமாற்றுகிறார். அதனால் அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. உண்மையானவர் அல்ல. அப்படிப்பட்டவரிடம் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார் கார் முதலாளி.
நம்மை மற்றவர்கள் எவ்விதம் எண்ண வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குத் தக்கபடி உடை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி நாம் செய்யவில்லை என்றால் நமக்கு நாமே தீங்கும் துரோகமும் செய்து கொள்கிறோம்.

உனக்காக நீ உணவு சாப்பிட வேண்டும். பிறருக்காக நீ உடை அணிய வேண்டும். ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழி இருக்கிறது. வீட்டில் எளிய உணவாக இருந்தாலும் பரவாயில்லை. அதை மற்றவர்கள் அறியமாட்டார்கள்.

ஆனால் நாம் அணியும் ஆடை ஒழுங்கானதாகவும் தூய்மையானதாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.

இப்படி இல்லாவிட்டால் பிறர் நமக்கு மதிப்பை தரமாட்டார்கள். நாம் சொல்லும் வார்த்தைக்கு ஒரு அந்த …ஏற்படாது. அதற்காக படாடோபமான ஆடம்பரமான ஆடைகளை அணிய வேண்டியது இல்லை.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எந்த வித உடை அணிந்து கொண்டிருக்கிறார்களோ அந்த ஆடையை அணிந்து கொண்டால் போதும். ரோமில் இருக்கும் போதும் ரோமான்யர்கள் போன்று இருக்க வேண்டும் என்ற பழமொழியை எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும்.

அதே நேரத்தில் அணியும் ஆடை நம்முடைய வருமானத்திற்கு தக்கபடி இருக்க வேண்டுமே தவிர அதற்கு அப்பாற்பட்டதாக இருக்கக்கூடாது.

நாம் ஒழுங்கான உடைகளை அணிந்திருப்பதைப் பார்த்து மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டுமே தவிர இகழக்கூடாது.

“மகனே நீ எங்கு இருக்கின்றாயோ அங்குள்ள சமகாலத்து அறிவாளிகள் எவ்விதம் உடை உடுத்திக் கொண்டிருக்கிறார்களோ அவ்விதமே நீயும் அவர்களைப் போன்ற உடை அணிய வேண்டும். உன்னுடைய தகுதிக்கு மீறிய ஆடையை அணியாதே என்று செஸ்டர் பீல்டு தன் மகனுக்கு தெரிவித்தார்.

“உன்னுடைய பணப்பையால் வாங்கும் அளவுக்கு உடைகள் இருக்க வேண்டும். அலங்காரத்திற்காக இருக்கக்கூடாது. உயர்தர ஆடையாக இருந்தாலும் பரவாயில்லை. பகட்டுடன் இருக்கக்கூடாது. உடையே ஒருவரை வெளிப்படுத்திக் காட்டும்” என்கிறார் சேக்ஸ்பியர்.
தூய்மையுடன் ஒழுங்குடனும் உடை அணிந்து இருக்கிறோம் என்ற எண்ணமே நமக்கு நன் மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் அளிக்கும்.

இதன் காரணமாக நமக்குப் பலரும் மரியாதை தருவார்கள். அதுவே நாமும் பலருடன் பழகி நம்முடைய அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள துணை புரியும்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||