Follow by Email

Tuesday, 22 February 2011

வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம்

எழுத்தறிவு என்பது பள்ளிக் கல்வியின் ஆதாரமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் எழுத்தறிவு என்பது முதியோர் கல்வி யுடன் மட்டுமே பேசப்படும் பொருளாகிவிட் டது. உலகில் உள்ள எழுத்தறிவற்ற மக்கட் தொகையில் பெரும் பகுதியினர் இந்தியா வைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதில் ஒன் றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் இந்தி யாவில் தொடர்ந்து எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது? இதற்குக் கார ணம் இந்தியாவில் ஆரம்பக் கல்வி கற்ற பின் னரும் குழந்தைகளின் எழுத்தறிவின்மை தொடருவதுதான். குழந்தைகள் எட்டாண்டு கால ஆரம்பக் கல்வியை முடிக்காமலேயே வெளிவருவதாலும், ஆரம்பக் கல்வியை விட்டு வெளி வந்த பின்னர் படிக்கும் பழக் கத்தை விட்டுவிடுவதாலும் மீண்டும் எழுத் தறிவின்மை நிலைக்கே சென்றுவிடுகின்ற னர். எழுத்தறிவு பெற்ற குழந்தைகளிடமும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும், ஆர்வத் தையும் பள்ளிக்கூடம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்காத குறையுள்ளது. படிக்கும் பழக்கம் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் உதவிடும் என்பதை உணர்பவர்கள் மிகக் குறைவு.

பள்ளிக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் அவர்களின் படிக்கும் திறன் மிகவும் குன்றியிருப்பதும், அவர்களுக்கு அதற்கான பயிற்சியே கொடுக்கப்படுவதில்லை என் பதும் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதைச் சரி செய்வதற்கு பள்ளிக் கூட அளவில் தக்க நடவடிக்கை எடுக்க வில்லையெனில், புதிதாக நிறைவேற்றப்பட் டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டமே செயலற்றுப் போய்விடும். கற்றுக் கொடுக்கும் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும்.
Read more »
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 6 February 2011

நேர் வழியில் கல்வி நெறி

கடந்த 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின், 45வது பிரிவில் இடம் பெற்று, 10 ஆண்டுகள் கெடு விதிக்கப்பட்டிருந்தும், நம் நாட்டுக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை ஏன் வழங்க இயலவில்லை? அந்த சட்டம் சொன்னது இது தான்: "14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க, இந்த அரசியலமைப்புச் சட்டம் துவங்கிய, 10 ஆண்டுகளுக்குள் அரசு வழிவகை செய்ய வேண்டும்...' இது அமலுக்கு வந்ததா?

இப்போது புதிதாக அரசியலமைப்புச் சட்டத்தின், 86வது திருத்தமாக, 21ஏ பிரிவில் கொண்டுவரப்பட்டு, ஏப்., 1, 2010 முதல் அமலாக்கப் பட்டுள்ள உத்தரவுகளின் சாராம்சம் இதோ:

* ஒரு கல்வி ஆண்டின் முதல் நாளிலிருந்து, ஆறு மாதங்கள் வரை, புதிய மாணவர் சேர்க்கை அனுமதிக்க வேண்டும்.

* அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழை பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது. அது இல்லாதபோது, வயது குறித்து பெற்றோர் அளிக்கும் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியே போதுமானது.

* எட்டாம் வகுப்பு வரை, எந்த ஒரு குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. இவை நிறைவேற்றுவதற்குக் கடினமானதாகவும், கல்வி என்ற ஒரு விஷயத்தையே புரட்டிப் போடும் விதத்திலும் அமைந்துள்ள சட்டங்கள். இது, வரவேற்கக் கூடியதாக, ஆனால் வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ள, திருத்தப்பட்ட பிற விதிகள் வருமாறு:

* நகரம், கிராமம் என்றில்லாமல், எல்லா இடங்களிலும் குழந்தைகளின் வீட்டுக்கு அருகே பள்ளிகள் இருக்க வேண்டும் அல்லது தோற்றுவிக்கப்பட வேண்டும்.

* தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால், அவர்கள் வசூலித்த நன்கொடைக்கு பத்து மடங்கு, அபராதம் விதிக்க வேண்டும்.

* குழந்தைகளை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால், 25 ஆயிரம் ரூபாய், முதல் முறை, பின், 50 ஆயிரம் வரை, ஒவ்வொரு முறையும், அவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

* அரசு அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், ஒரு லட்சம் அபராதம்; தொடர்ந்து நடத்தினால், ஒவ்வொரு நாளுக்கும் பத்தாயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.

* தனியார் பள்ளிகளில், ஏழைக் குழந்தைகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு செய்து, இலவசக் கல்வி அளிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? போகட்டும்! நம் கவலையெல்லாம் முதலில் சொன்ன, மூன்று உத்தரவுகள் தான்... அரசு அமைப்புகள் வழங்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமல்ல என்றாகிவிட்டால், பிஞ்சு வயதிலேயே, குழந்தைகளின் வயதை மறைத்தும், குறைத்தும், பள்ளிகளில் தள்ளும் நிலை உருவாகக்கூடும். "மூன்று மாதங்கள்தானே குறைவு; பரவாயில்லை... சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று, பெற்றோர் தரப்பிலிருந்து வரும் அபாய கோரிக்கைகள், எங்களை போன்ற கல்வியாளர்கள் நன்கு அறிந்ததே. அடுத்து, ஒரு கல்வியாண்டின், முதல் ஆறு மாதங்கள் வரை மாணவர்கள் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு. இது எங்கே போய் முடியும் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. சில பெற்றோர் அலட்சியமாக, காலதாமதம் செய்து, பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தல், தகுந்த காரணங்கள் இன்றி, அந்த ஆறு மாதத்தில் பள்ளி மாற்றத்தில் பெற்றோர் ஈடுபடுவது, ஆண்டில் பாதி படிப்பை படிக்க இயலாமல் குழந்தைகள் சிரமப்படுதல், பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறித்து ஆறு மாதம் வரை பள்ளிகளும், அரசும் அறியாமல் இருத்தல் போன்ற, பல பிரச்னைகள் இதில் உண்டு. அடுத்து, எட்டாம் வகுப்பு வரை, எல்லாக் குழந்தைகளையும் பாஸ் செய்ய வேண்டும் என்ற சட்டம். "கட்டாயக் கல்வி' என்ற பெயரில் உருவாகும் இச்சட்டம், "கட்டாயப் பள்ளி' என்ற விதமாக மட்டுமே அமையும். இப்படி பாஸ் செய்து, ஒன்பதாம் வகுப்புக்குள் நுழையும் குழந்தைகள் எப்படி "படித்து' பாஸ் செய்வர்? ஐந்தில் வளையாதது, பதினைந்தில் வளையும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை. இதில் ஆபத்து என்னவெனில், பத்தாம் வகுப்பில் இவர்கள் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, அந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் 24 மணி நேரமும் படிக்க வேண்டும் என்று பள்ளிகளும், பெற்றோரும் மிரட்டக்கூடிய நிலை ஏற்படும்.

"பத்தாம் வகுப்புக்கு இவர்களை அனுப்பினால், 100 சதவீத தேர்ச்சி கிடைக்காது' என்பதற்காக, ஒன்பதாம் வகுப்பிலேயே இக்குழந்தைகளை பள்ளிகள் பெயிலாக்கினால் அவர்களின் எதிர்காலம் என்னாகும்? டுட்டோரியல், தனித் தேர்வுகள் என்று ஓரங்கட்டப்பட்டு, கல்லூரிகளால் புறக்கணிக்கப்பட்டு, வாழ்க்கை தோல்வியில் முடியும் அபாயமே அதிகம். நம் குழந்தைகளுக்குத் தேவை கட்டாயப்பள்ளி மட்டுமல்ல; கட்டாயக் கல்வியும் கூட. அதற்குத் தேவை பள்ளிகளுக்கென்று, ஆசிரியர்களுக்கென்று சில சுதந்திரங்கள்; சில அதிகாரங்கள். தெரிந்தும் தவறு செய்யும் பெரியவர்களை நல்வழிப்படுத்த எப்படி காவல் துறைக்கு கட்டாய சட்டங்கள் தேவையோ, அதே போல, தெரியாமல் தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த அவர்களுக்கு, "கட்டாயக் கல்வி' அளிக்க பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சுதந்திரங்கள் இருந்தாக வேண்டும். இன்றைய புள்ளி விவரப்படி, ஒரு ஆசிரியருக்கு, 50 மாணவர்கள் என்பதே நாடெங்கும் உள்ள பள்ளிகளின் நிலை. இதை இச்சட்டம் குறிப்பிடுவதைப் போல, 1:30 என, மாற்றவும், லட்சக்கணக்கான கிராமங்களில், குழந்தைகளின் வீட்டருகே பள்ளிகள் அமைக்கவும் பெரும் தொகை செலவாகும். 2010ல் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வின்படி, இதையெல்லாம் நிறைவேற்ற, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதில், மத்திய அரசும், மாநில அரசும் 68:32 என்ற விகிதத்தில் பங்களிக்க வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல மாநில அரசுகள், "எங்களிடம் பணமில்லை' என, கைவிரித்துள்ளன.

நம் நாட்டில் கல்வி என்பது வெறும் பொழுது போக்கோ, சமுதாயக் கடமையோ மட்டும் அல்ல. மக்கள் தொகை என்ற கடலில், வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வளம் என்ற நீச்சல் போட்டியில், நீந்திக் கரை சேர வேண்டிய நிலை இங்கு எல்லா மாணவர்களுக்கும் உண்டு. பெற்றோர் எதிர்பார்ப்பது, தங்கள் குழந்தைகள் பாஸ் என்ற வெற்று சான்றிதழ்கள் அல்ல. பேச்சு, எழுத்து, புத்திக்கூர்மை, பண்புகள் என எல்லாவற்றிலும் அவர்கள் வல்லவர்கள் என்ற சான்றுகளே அவர்களின் தேவைகள். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பள்ளிகளுக்குள் நுழையலாம். அங்கு படித்தும், படிக்காமலும் இருக்கலாம். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் லீவு போடலாம். படி, ஒழுங்காக நடந்துகொள் என்ற ஆசிரியர்களின் கட்டளைகளை புறந்தள்ளலாம் என்றானால், "கல்வி' என்பதுதான் என்ன? எனவே, கல்வியிலும் தேவை சட்டம், ஒழுங்கு. சட்டத்தை இயற்றுபவர்களும், விதிகளை உருவாக்குபவர்களும் இதையெல்லாம் கவனத்தில் கொள்வரா?

பா.புருஷோத்தமன், கல்வியாளர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 1 February 2011

அலைபேசிகளால் விலைபோகும் நிம்மதி

இன்று கையில் புத்தகம் இருக்கிறதோ, இல்லையோ மாணவர்களிடையே அலைபேசிகள்தான் ஆக்கிரமித்துள்ளன. கர்ணன் கவசக் குண்டலத்துடன் பிறந்ததைப்போல அலைபேசியும் கையுமாக அலைபவர்கள் பலர். இதனால் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்களை மறந்து போய்விட்டனர்.

பாடம் படித்த நேரம்போக மீதி நேரம் விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள், புத்தகம் வாசித்தல் அனைத்தும் கனவாகிவிட்டன.

இப்படி விஞ்ஞான மயமாகிவிட்ட வாழ்க்கையில் மனிதனின் அனைத்து கௌரவங்களும் அவர்களது செய்கையால் நகைப்புக்கு ஆளாக வைக்கிறது.

பஸ், ரயில் இப்படிப் பயணம் செய்யும்போது பிறரைப்பற்றி கவலைப்படாமல் அலைபேசிகளில் பேசி வெறுப்பைச் சம்பாதிப்பவர்கள் ஏராளம். சொந்தப் பிரச்னை, அலுவலகம், கிண்டல் இப்படி எதுவாக இருந்தால் என்ன.. அதற்கென இடம், பொருள் பார்ப்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். இது வாகன ஓட்டிகளிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது.

ஏலே..மாப்ளே.. என்பதுடன் நிற்காமல் உரக்க சப்தமிட்டுப் பேசுவதால் பிற பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.

அதேபோல தங்களது குடும்ப ரகசியங்கள், விவரங்கள் ஆகியவற்றையும் பெருமையாகப் பேசுகின்றனர். இன்னும் சிலர் கம்பெனி நிலவரம், சக பணியாளர்கள் பற்றி மட்டரகமான விமர்சனம் என ஏகமாகப் பேசிவிடுகின்றனர்.

பல திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் யாரும் திருந்தியபாடில்லை. மாறாக, தங்களது சுயகௌரவத்தையும், தன்மானத்தையும் இழக்கின்றனர்.

பல இடங்களில் வீடுகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் இதுபோன்ற அசட்டுத்தனமான உளறல்களால் ஏற்படுகின்றன. பொதுஇடங்களில் பேசுவதைக் கேட்டும் மர்மநபர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதற்கும் இது இலகுவாக அமைந்துவிடுகிறது.
இதனால்தான் காவல்துறையினர் அவ்வப்போது வெளியூர் செல்வது குறித்தோ, பிற விவரங்கள் குறித்தோ பொது இடங்களிலோ, தொலைபேசிகளிலோ தெளிவாகப் பேச வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை.

இது ஒருபுறம் இருக்க வாகனங்களில் செல்வோர் செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிகளும், மாணவ, மாணவிகளும் பயணம் செய்கின்றனர்.

வாகனம் ஓட்டும்போது அப்படி என்ன தலைபோகும் தகவலைப் பரிமாறிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இதைவிட பெரிய கொடுமை இருசக்கர வாகன ஓட்டிகளின் செயல்பாடு. தகவல் பரிமாற்றம் மிக மிக அவசியம்தான். ஆனால், அதற்கென நேரம், காலம் வேண்டும் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

இதுதவிர, அலுவலகங்களிலும் அலைபேசி தொந்தரவு பல வேலைகளுக்கு இடையூறாக உள்ளது. இது அரசு அலுவலகங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இதைத் தடுக்க ரேஷன் கடைகள், பாலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், தொலைபேசி கட்டணம் செலுத்துமிடம், ரயில் முன்பதிவு, பயணச்சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் அலைபேசி பேசுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

மேலும், பஸ்களில் அலைபேசி பேசுவோருக்கு நடத்துநர்கள் எச்சரிக்கை விடுக்க வேண்டும் அல்லது பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு பேசுமாறு அறிவுரை வழங்கலாம்.

அலைபேசி பேசுவது அவரவர் உரிமைதான் என்றாலும், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்கலாம். இவ்வாறு செய்வதால் தமக்குப் பாதுகாப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

குறிப்பாக, வாகனங்களில் செல்வோர் அலைபேசி பேசுவதை அறவே தவிர்த்தல் நலம். இப்படி அலைபேசிகளால் சில நேரங்களில், விலையாக உயிர்ப்பலிகளும் ஏற்படுவதால் அதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்வதே சிறந்தது.

எஸ்.ரவீந்திரன்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts