பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 8,53,355 மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டு  தேர்வினை எழுதியுள்ளனர். இத்தேர்வில்  பள்ளிகள் வாயிலாக தேர்வு எழுதியவர்களில் 7,04,125 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மாணவ, மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக “இணைய தளம் ” வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சித் துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.

வேலைவாய்ப்பகத்தில் தங்களது தகுதியினை பயின்ற பள்ளிகளில் பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களது குடும்ப அட்டை மற்றும் சாதிச் சான்றிதழினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.  மேலும், தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

தற்பொழுது புதியதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும்.  மாணவ, மாணவியர் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை  வேறு ஒரு வேலைநாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 27.05.2013 அன்று பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்படவுள்ளது. 27.05.2013 முதல் 10.06.2013   (15 நாட்களுக்குள்)  அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ மாணவியர் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.  இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு +2 கல்வித் தகுதிக்கு 27.05.2013 தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.

கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதனையொட்டி ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம்  ஏற்படும்காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினை முற்றிலும் தவிர்ப்பதற்காக பள்ளிகளின் வாயிலாகவே இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் +2 கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||