பள்ளிகளில் பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய ‘ஹெல்ப்லைன்’ தகவல் மாணவ–மாணவிகள் எளிதில் அறிய பாடப்புத்தகத்திலேயே இடம்பெறுகிறது.

பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு ஹெல்ப்லைன் பற்றிய தகவல் பள்ளி மாணவ–மாணவிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் முதல்முறையாக அவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டு உள்ளது.முதல்கட்டமாக இந்த ஆண்டு பிளஸ்–1 பாடப்புத்தகங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக 1098 என்ற விசேஷ ஹெல்ப்லைன் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இது ஒரு கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் ஆகும். பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் மாணவ–மாணவிகள் இந்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில்கூட இந்த ஹெல்ப்லைன் வசதி குறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுப் பேசினார்.பாலியல் கொடுமை குறித்து புகார் செய்ய உதவும் ஹெல்ப்லைன் வசதி குறித்து மாணவ–மாணவிகள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களின் பாடப்புத்தகத்தில் அச்சிட அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக 11–ம் ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஹெல்ப்லைன் வசதி குறித்த தகவல் இடம்பெறுகிறது. பிளஸ்–1–ல் அனைத்து பாடப்புத்தகங்களின் அட்டையில் இந்த விவரம் அச்சிடப்பட்டு இருக்கும். தற்போது 11–ம் வகுப்பு புத்தகங்களில் இடம்பெறும் ஹெல்ப்லைன் தகவல் பற்றிய விவரங்கள் அடுத்த ஆண்டில் இருந்து அனைத்து வகுப்பு புத்தகங்களிலும் இடம்பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் இ.சரவண வேல்ராஜ் தெரிவித்தார். பள்ளி பாடப்புத்தகங்களின் வினியோகம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:–இந்த ஆண்டு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு 10 கோடியே 34 பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி கிட்டதட்ட 75 சதவீதம் முடிவடைந்துவிட்டது. எஞ்சிய 25 சதவீத பணியான 6, 7, 8–ம் வகுப்பு புத்தகங்களை அனுப்பும் பணியும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 3–ந் தேதி அன்று பாடப்புத்தகங்கள் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு சரவண வேல்ராஜ் கூறினார். இதற்கிடையே, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக புத்தக விற்பனை மையத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று ஏராளமான மாணவ–மாணவிகளும், பெற்றோரும் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

Comments