என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெறுவதற்கு தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகாரம் தேவை இல்லை என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். காலேஜ் ஆப் என்ஜினீயரிங் என்ற கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– எங்கள் கல்லூரி, ஏ.ஐ.சி.டி.இ.யின் அங்கீகாரம் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பையும் பெற்றுள்ளோம்.

ஆனால் இந்த கல்வியாண்டுக்கான (2013–2014) அங்கீகாரத்தை ஏ.ஐ.சி.டி.இ. வழங்கவில்லை. அங்கீகார கடிதத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்து தற்காலிக இணைப்பு அனுமதியை கடந்த ஆண்டு ஏ.ஐ.சி.டி.இ. வழங்கியது. ஒரு ஆலோசனை அமைப்பாகத்தான் ஏ.ஐ.சி.டி.இ. செயல்படுகிறது என்றும், எந்த ஒரு அனுமதியை வழங்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

எனவே பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதி பெறுவதற்கு ஏ.ஐ.சி.டி.இ.யின் அங்கீகாரம் தேவை என்பதை வலியுறுத்தாமல், இணைப்பை வழங்க உத்தரவிட வேண்டும்.எங்கள் கல்லூரிக்கு இந்த ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணைப்பை வழங்கினால்தான் எங்கள் கல்லூரிக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். எனவே எங்கள் கல்லூரிக்கு இணைப்பை அனுமதிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசீதரன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:– மனுதாரர் கல்லூரி மே மாதத்தில் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர். ஏ.ஐ.சி.டி.இ.யின் ஒப்புதல் உத்தரவு வேண்டும் என்பதை வலியுறுத்தாமல், அதே நேரத்தில் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருந்தால், கல்லூரியின் விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ததற்கான அறிக்கையையும் மனுதாரர் கல்லூரி தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து இணைப்பு அனுமதி தொடர்பான உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கில் மனுதாரர் கல்லூரியை அனுமதிப்பது தொடர்பாக 28–ந் தேதிக்குள் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.மனுதாரர் தரப்பில் வக்கீல் கந்தன் துரைசாமி ஆஜரானார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||