திருவண்ணாமலையில் ரூ.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.திருவண்ணாமலையில் ரூ.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் தற்போது 18 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் படிப்படியாக தொடங்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை ஆகும்.

அதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்க 25 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு, ரூ.73 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டது. இங்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) விதிகளின்படி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேவையான நிர்வாக கட்டிடம், தொழில்முறை பணியாளர்கள் கூடம், மாணவர்கள் தங்கும் விடுதி, நூலகம் ஆகியவற்றுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த மருத்துவக்கல்லூரிக்கு தேவையான மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் செய்யும் பொருட்டு 192 நிரந்தர பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.16 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களை சேர்க்க எம்.சி.ஐ. அனுமதி வழங்கியது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,145 மருத்துவ இடங்கள் இருந்தன. தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரிக்கான 100 இடங்கள் உட்பட, 410 கூடுதல் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 2,555–ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் 73 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தலைமைச்செயலகத்தில் இருந்து  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன், தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் வம்சதாரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments