தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பள்ளிக்கல்வித் துறையில், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தவில்லை. இதனால், இரு துறைகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், புலம்பி வருகின்றனர்.

இரு துறைகளிலும், பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், மேற்குறிப்பிட்ட இரு கலந்தாய்வுகள் மட்டும், இதுவரை நடக்கவில்லை. இரட்டை பட்டம் பெற்றவர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக, வழக்கு நிலுவையில் இருப்பதால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை என, தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், ஆங்கில ஆசிரியர் மட்டுமே, இரு பட்டங்களை பெற்றுள்ளனர். எனவே, ஆங்கிலம் தவிர்த்து, இதர ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, தொடக்கக் கல்வித் துறை முன்வர வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது: விரைவில், டி.இ.டி., தேர்வு முடிவு வரப்போகிறது. அப்போது, தொடக்கக் கல்வித் துறையில், 1,500 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில், 2,881 முதுகலை ஆசிரியர், புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை நியமனம் செய்வதற்கு முன், தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||