தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பட்டதாரிகள் குரூப்–2 தேர்வை எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பட்டதாரிகள் குரூப்–2 தேர்வை எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்–2 தேர்வானது தமிழகம் முழுவதும் உள்ள 114 நகரங்களில், நேற்று நடைபெற்றது. சென்னையில் 263 மையங்கள் உள்பட 2 ஆயிரத்து 269 தேர்வு மையங்களில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 6 லட்சத்து 65 ஆயிரத்து 638 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஆயிரத்து 55 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மொத்தம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 583 பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 437 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 66 ஆயிரத்து 146 பட்டதாரிகள் தேர்வு எழுதவரவில்லை என்று கூறப்படுகிறது.

தேர்வு மையங்களில் தேர்வு எழுத சென்றவர்களின் செல்போன்களை உள்ளே கொண்டு செல்லாமல் இருக்கும் வகையில், தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, செல்போன்களை வாங்கி கவரில் போட்டு வைத்துக் கொண்டு, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் தேர்வு முடிந்து வெளியில் வந்த பின்னர் டோக்கன் எண்களை அழைத்து உரிய நபரிடம் செல்போன்கள் வழங்கப்பட்டன. இதனால் செல்போன்களுடன் தேர்வு எழுத சென்றவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் செல்போன்களை ஊழியர்களிடம் ஒப்படைத்து மீண்டும் பெற்றுச் சென்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், செயலாளர் விஜயகுமார் ஆகியோர், திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.திருமலை நாயக்கர் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப்–2 தேர்வினை பார்வையிட்டனர். அப்போது ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் குரூப்–2 தேர்வுக்கு நல்ல முறையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும், காவல்துறையும் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர்.

குரூப்–2 மூலம் ஆயிரத்து 64 பணியிடங்களுக்கான தேர்வுகள் 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று(நேற்று) முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது. இதில் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் தேர்வு பெறுபவர்கள் 2–வது நிலையான, முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதிலும் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

அந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 3–வது நிலையாக நடைபெறும் 40 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும். தேர்வுகள் ஒளிவு மறைவு இன்றி நேர்மையாக நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும். தேர்வர்கள் விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, தமிழ் மொழி கல்வி, ஆதரவற்ற விதவை, சாதிச்சான்றிதழ்கள் போன்றவற்றை ஒழுங்காக சமர்ப்பிக்காமல் இருந்தால் குழப்பம் ஏற்படும்.

இது போன்ற குழப்பங்கள் இல்லாமல் இருந்தால், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். முதல்நிலை தேர்வுக்கான விடைகள் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும். இந்த தேர்வில், மதுரையை சேர்ந்த சொப்னா என்ற திருநங்கை தற்காலிகமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் பெண்கள் பிரிவில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மருத்துவர் குழு ஆலோசனை மற்றும் பிற நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னர் அவரை எந்த பிரிவில் சேர்ப்பது என்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்நிலை தேர்வு எழுதிய பெரும்பாலான தேர்வர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:–

இந்த ஆண்டு கேள்வித்தாள்கள் கடந்த ஆண்டை விட எளிமையாக இருந்தது. தமிழ் மொழித்தாள் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. பொது கல்விக்கான கேள்விகளும் எளிமையானதாகவும் மற்றும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளும் கேட்கப்பட்டிருந்தன. கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று யோசித்து பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதனால் நேரம் சற்று விரையமானது. திறனாய்வு கேள்விகளும் சற்று சிரமமாக இருந்தது.இவ்வாறு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

Comments