அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனசை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும்.ஏ, பி ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக அவர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

 தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே போனஸ் என்றிருந்ததை மாற்றி, முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் திருநாளன்று கருணைத்தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். எனது தலைமையிலான அரசும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணித்தன்மையையும், வேலைப்பளுவினையும் கருத்தில் கொண்டு, அவர்களை பாதுகாக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக, அவர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்படி, 2012–2013–ம் நிதி ஆண்டிற்கு, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும். ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 2012–2013–ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக்கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப்பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப்பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதன் மூலம், தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி பொங்க கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 308 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.


CLICK HERE FOR ALL STUDY MATERIALS

Comments