மருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை

மருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை | மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கிய தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு அறிவுறுத்தியது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, கடந்த ஜூன் 22-ந் தேதியன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 15 சதவீதம் தேசிய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய பிறகு மீதமுள்ள 85 சதவீத இடத்தை மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும், இந்த 85 சதவிகிதத்தில் 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக காவ்யா என்ற மாணவியின் தந்தை ஆர்.நக்கீரன் உள்ளிட்ட 18 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு  சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் தனது வாதத்தில் கூறியதாவது:- மாணவர்கள் எந்த பாடத்திட்டத்தில் பயின்றார்கள் என்ற பாகுபாடு இன்றி அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களை மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு அதிகமாக ஒதுக்கிய உத்தரவை சட்டத்துக்கு புறம்பானது என்று குஜராத் ஐகோர்ட்டு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு ஜூன் 22-ந் தேதியன்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, தனது வாதத்தில் 'சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. தற்போது தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் உள்ளது. எனவே, இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிப்பது ஏற்புடையதாக இருக்காது' என்று கூறினார். இதற்கு நளினி சிதம்பரம், 'ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 'நீட்' தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டு விசாரிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே, இங்கு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும்' என்று கூறினார். இதற்கு சேகர் நாப்டே, 'இது நீட் தொடர்பான வழக்கு அல்ல. நீட் தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு. எனவே, இதனை ஐகோர்ட்டு விசாரிக்கலாம். தமிழக அரசு பதில் மனு அங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வரப்போகிறது' என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'மனுதாரர்கள் சென்னை ஐகோர்ட்டை, ஏற்கனவே உள்ள வழக்குடன் இணைத்தோ அல்லது தனி வழக்காகவோ அணுகலாம். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விரைந்து முடிக்க வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

Comments