‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை | 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் நடத்தப்படும் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் மசோதா ஒன்றும் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை தமிழக எம்.பி.க்கள் நேற்று டெல்லி மேல்-சபையில் எழுப்பினர். பூஜ்ஜிய நேரத்தின் போது இந்த கோரிக்கையை எழுப்பிய அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மாநிலத்தில் 98 சதவீதம் மாணவர்கள் மாநில கல்வித்திட்டத்தில் படிக்கும் நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி. பேசுகையில், தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைத்துக்கட்சிகளின் கோரிக்கையாகும் என்றார். மருத்துவக்கல்லூரி கட்டமைப்புகளில் மாநில அரசு முதலீடு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். 'நீட்' தேர்வில் வடஇந்திய மாணவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தென்னிந்திய மாணவர்களுக்கு கடினமான கேள்விகளும் இருந்ததாக குற்றம் சாட்டிய நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) எம்.பி., இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று தெரிவித்தார். இந்த தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.ராஜா ஆகியோரும் தமிழகத்துக்கு 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் 'நீட்' தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு மத்திய அரசின் பதில் என்ன? என்பதை விளக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார். இதற்கிடையே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக எம்.பி.க்களின் இந்த கோரிக்கைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, 'இந்த விவகாரத்தில் அனைத்து பிரிவினருடனும் அரசு விவாதித்தது. இந்த பிரச்சினையில் தற்போது காலம் கடந்துவிட்டது. இது நீதிமன்ற விசாரணையிலும் இருக்கிறது. எனினும் அனைத்து தரப்பினரின் கோரிக்கையையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்' என்று தெரிவித்தார். பின்னர் சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறுகையில், 'நாட்டின் அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. கடந்த ஆண்டு இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏற்கனவே நடந்தாகி விட்டது' என்றார். 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு எங்கள் கருத்து மற்றும் பதிலை அளித்துவிட்டோம் என்று கூறிய ஜே.பி.நட்டா, அது தற்போது ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் மூலம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

Comments