புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி சென்னையில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 22-ந்தேதி வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு

புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி சென்னையில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 22-ந்தேதி வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு | புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி சென்னையில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 22-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், 8-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் (ஜியோ) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் என சுமார் 72 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இரவு முதலே வந்து குவியத்தொடங்கினர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலையே வாகனங்களில் சேப்பாக்கத்துக்கு வந்து குவிந்தனர். இதனால் சேப்பாக்கம் வாலாஜா சாலை பரபரப்பாக காணப்பட்டது. சாலையின் இரு பக்கமும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் தலைகளாகவே தென்பட்டது. இதனால் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை வாலாஜா சாலையின் இரு மார்க்கத்திலும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் திருவல்லிக்கேணி பெரிய மசூதி சாலை, அண்ணா சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. போராட்டத்தில் அதிகபட்சம் 2 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று போலீசார் கருதினர். ஆனால் அவர்களுடைய கணிப்பையும் மீறி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எங்களுடைய கோரிக்கைகளின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில் கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்திருந்தோம். அனுமதி மறுக்கப்பட்டதால் ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் சென்னை சேப்பாக்கம் நோக்கி வந்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்னெழுச்சியினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு கெடுபிடிகளை கையாண்டது. வட்டார போக்குவரத்து அலுவலர்களின் மூலமாக பஸ்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பஸ் உரிமையாளர்கள் அரசு அதிகாரிகளால் மிரட்டப்பட்டார்கள். இருப்பினும் அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சென்னை நகரமே ஸ்தம்பித்துள்ளது. இனிமேலும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கைகளின் மீது பாராமுகமாக இருந்தால் கடுமையான போராட்டங்களுக்கு தயாராக வேண்டிய நிலை உருவாகும். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் அடிப்படையில் வருகிற 22-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும். அன்றையதினம் பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். இதன்பின்னரும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதில் இருந்து யாரும் பின்வாங்கமாட்டோம். இந்த போராட்டத்துக்கான ஆயத்த மாநாடுகளை மாவட்ட தலைநகரங்களில் வருகிற 26 மற்றும் 27-ந்தேதி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments