பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் வல்லுனர் குழுவுக்கு புதிய தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் நியமனம் தமிழக அரசு உத்தரவு


பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் வல்லுனர் குழுவுக்கு புதிய தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் நியமனம் தமிழக அரசு உத்தரவு | பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவுக்கு புதிய தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரான சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்க 26.2.16 அன்று ஆணையிட்டார். இந்த ஆணையின்படி குழு அமைக்கப்பட்டு பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. இதற்காக 26.6.16, 15.9.16, 16.9.16, 22.9.16, 6.10.16, 2.12.16 மற்றும் 9.3.17 ஆகிய நாட்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய 21.10.16 அன்று ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுனர் குழு அறிக்கை தயாரிக்க இருந்தது. அந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுனர் குழு தனது பணியினைத் தொடர்ந்து விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க ஏதுவாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதரை வல்லுனர் குழுவின் தலைவராக தமிழக அரசு நியமித்து 3-ந் தேதி (நேற்று) ஆணையிட்டது. அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்த அறிக்கையை வரும் நவம்பர் இறுதிக்குள் இந்தக்குழு சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments