சென்னைக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சுங்கச்சாவடிகளில் சாலை மறியல்

சென்னைக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சுங்கச்சாவடிகளில் சாலை மறியல் | சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்ததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாணியம்பாடி, வாலாஜா சுங்கச்சாவடிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்பதற்காக, வேலூர் மாவட்டத்தில் இருந்து கோட்டையை நோக்கி செல்ல முயன்ற ஜாக்டோ-ஜியோவை சேர்ந்த ஏராளமானவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இருந்து வாகனங்கள் மூலம் கோட்டையை நோக்கி புறப்பட தயாரான தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் ஜாக்டோ- ஜியோவை சேர்ந்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து வேனில் ஜாக்டோ மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் சென்னைக்கு செல்ல முயன்ற 17 பெண்கள் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே பஸ், வேனில் சென்னைக்கு புறப்பட முயன்ற 90 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள், 25-க்கும் மேற்பட்டோர் சென்னை செல்வதற்காக திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே திரண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல காட்பாடியிலும் சுமார் 10 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காவேரிப்பாக்கம், ஓச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வேன்களில் புறப்பட தயாராக இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடியில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்ற வாகனங்களை போலீசார் மடக்கி நிறுத்தினர். இதனால் அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலை 8 மணி அளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையை நோக்கி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்ற வாகனங்கள் வாலாஜா சுங்கச்சாவடியை வந்தடைந்த போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் காலை 7 மணி முதல் 9-30 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்டவர்கள், தங்களை தடுத்து நிறுத்திய போலீசாரையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments