மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்.

மாநில பாடத்திட்டம் நமது நாட்டில் உள்ள மற்ற பாடத்திட்டங்களுக்கு சளைத்தது அல்ல என்று போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து முதல்வர் கே.பழனிசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பிளஸ் 2 மாணவர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படுகின்றன. இதன் தொடக்க விழா மற்றும் கையேடு வெளியீட்டு விழா நேற்று கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்று பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். முதலில், எடப்பாடி மேனிலைப்பள்ளியில் உள்ள மாணவர்கள் பயிற்சி பெறுவதை, காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தார். அதன்பின், பள்ளி மாணவர்களுக்கு கையேட்டினை வழங்கினார். அப்போது முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: மாணவர்களின் அறிவுத்திறனை மெருகூட்டி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். இப்பயிற்சிக்காக இதுவரை 73 ஆயிரம் மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர். இத்திட்டம் இந்தஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்றியத்துக்கு ஒரு மையம் என்ற வகையில் தமிழகத்தில் 412 மையங்களில் இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பெறாமல், பிளஸ் 2-க்கு பின் தொழில்சார் பட்டப்படிப்புகளி்ல் சேரவுள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இப்பாடங்கள் நடத்தப்படும். 30 புத்தகங்கள் இதற்கான பாடப்பகுதிகள் மாணவர்களுக்கு 30 புத்தகங்களாக வழங்கப்படும். பள்ளிகளில் பெறும் கல்விச் செயல்பாடுகளில் எவ்வித தேக்கமும் அடையா வண்ணம், மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுத்தேர்வு முடிந்தபின் தினமும் அதே நேரத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன. தற்போதுள்ள நம் பாடத்திட்டம் நாட்டில் உள்ள எந்த ஒரு பாடத்திட்டத்துக்கும் சளைத்தது அல்ல. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்படுவதால், வேறு எந்த பயிற்சியும் எடுத்துக் கொள்ள தேவையில்லை. வேறு எந்த செலவினமும் செய்ய வேண்டியதில்லை. மாணவர்களாகிய நீங்கள் எந்த நேரத்திலும் ஏன், எதற்கு, எப்படி, எங்கே, எப்போது, யாரால் என்ற கேள்விகளை உங்களுக்கு துணையாக அழைத்துச் செல்லுங்கள். உங்களை சறுக்கிவிழாமல் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக அவை செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் .பன்னீர்செல்வம் பேசும்போது, 'மாணவர்கள் அறிவைத்தேட வேண்டும். கற்றோரை நாட வேண்டும். சிறந்த புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க வேண்டும். அதனால் உங்கள் உலகம் புதிதாய்ப் பிறக்கும். கல்வி கேள்வியில் சிறந்தவர் என்பதால் மட்டுமே ஒருவரை உயர்ந்தவராக கருதிவிட முடியாது. அத்தகைய தகுதிகள் அவர்கள் ஒழுக்கத்தால் வருவது என்பதை மாணவ, மாணவியர் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்'' என்றார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் பேசும்போது, 'ஸ்மார்ட் கார்டு, ஸ்மார்ட் வகுப்பறை என நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும்' என்றார். நிகழ்ச்சியில், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், நட்ராஜ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||