மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்: தகுதிப்பட்டியலை மார்ச் 10-ந் தேதிக்குள் வரையறை செய்து வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்: தகுதிப்பட்டியலை மார்ச் 10-ந் தேதிக்குள் வரையறை செய்து வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் மார்ச் 10-ந் தேதிக்குள் தகுதிப்பட்டியலை வரையறை செய்து வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான (மருத்துவ மேற்படிப்பு) மாணவர் சேர்க்கையில், அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தொலைதூர கிராமங்கள், மலை கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளை வரையறை செய்தது. இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேரும் போது அவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறி இருந்தது. மேலும், அரசாணையின்படி முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலையும் வெளியிட்டது. இதை எதிர்த்து பிரணிதா என்ற டாக்டர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை ரத்து செய்தும், புதிய தகுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் அரசாணையையும் ரத்து செய்தது. ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. சுபாஷினி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மாணவர்களும் இந்த உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்து இருந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தொலைதூர கிராமம், கடினமான பகுதிகள், மலைப்பகுதிகள் ஆகியவற்றை வரையறை செய்வது குறித்து ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நிலைமையை ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு எதிராக தொடரப்பட்ட இதே போன்ற வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கான தகுதிப்பட்டியல் தயாரிக்கும் போது உரிய வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மார்ச் 10-ந் தேதிக்குள் தகுதிப்பட்டியலை வரையறை செய்து வெளியிட வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

Comments