சமுதாய முன்னேற்றத்திற்கு புத்தகங்களே படிக்கட்டுகளாக அமைந்துள்ளன - நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு

சமுதாய முன்னேற்றத்திற்கு புத்தகங்களே படிக்கட்டுகளாக அமைந்துள்ளன - நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு |வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டமும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய தேசிய நூலக வார வாசிப்பு விழிப்புணர்வு விழாவில், ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு புத்தகங்களே என்றும் படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்று நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேஷ் குறிப்பிட்டார். இவ்விழாவிற்கு பங்கேற்ற அனைவரையு ம் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியின் நூலகர் கே.கலாராணி, உதவி நூலகர் எஸ்.காந்திமதி, அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவிற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேஷ், 'வாசிப்பால் உலகை நேசிப்போம்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: " புத்தகம் வாசிப்பு பழக்கத்தை இளைய வயதிலேயே குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும். இன்றைக்கு பொதுவாகவே நமது வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றோம். படிப்பதைவிட பார்ப்பது நமக்கு பிடித்தமானதாக மாறிப்போயிருக்கிறது. இன்றைய குழந்தைகள் புத்தகம் படிப்பது, விளையாடுவது என்பதையெல்லாம் மறந்து, செல்போனை பயன்படுத்துவதிலும், கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ்களை விளையாடுவதிலும் மிக அதிகமாக ஈடுபடுகிறார்கள். இதனால் இளைய வயதிலேயே அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் தடைபடுகிறது. ஒவ்வொரு மனிதனின் சுய சிந்தனைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் புத்தக வாசிப்பே மிகுந்த பயனளிக்கும். குழந்தைகளைக் கோயில்களுக்கும் திரையரங்குகளுக்கும் பெற்றோர்கள் அழைத்துச் செல்வதைப் போல், நூலகங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். உலக அறிஞர்கள் மற்றும் இந்திய தலைவர்கள் நம்மோடு பேசுவதற்காக புத்தகங்கள் வழியே காத்திருக்கிறார்கள். பாடப்புத்தகம் படிப்பது மதிப்பெண் பெறுவதற்காக என்றால், மற்ற சமூக - கலை - இலக்கிய - வரலாற்று நூல்களைப் படிப்பது வாழ்வில் நம்மை உயர்த்திக் கொள்வதற்காகவே என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சுவாசிப்பதால் வாழ்கிறோம்; புத்தகங்களை வாசிப்பதால் வளர்கிறோம் என்கிற எண்ணமிருந்தால், அனைவரும் புத்தகம் படிக்கிற நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ள முடியும். அண்ணல் காந்தியடிகள், பண்டித ஜவஹலால் நேரு, சட்ட மேதை அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா போன்ற பல தலைவர்கள் புத்தகங்களின் வழியே சமுதாய மறுமலர்ச்சிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாம் புத்தகங்களை வாசிப்போம். சமுதாயத்தின் புதிய தலைமுறை வாசிப்பதனால் மட்டுமே விழிப்புணர்வை அடைய முடியும்" என்று குறிப்பிட்டார். விழாவில், மாணவிகளுக்காக நடத்தப்பட்ட 'புத்தக விநாடி -வினா'வில் வெற்றிபெற்ற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகள் எழில்வாணி, அன்புச்செல்வி, ஐஸ்வர்யா, திவ்யா, சிந்துஜா, தெய்வானை, தி.சங்கீதா, இலக்கியா, லதா, பவித்ரா ஆகியோருக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், புத்தகப் பரிசுகளை வழங்கினார். கல்லூரியைச் சேர்ந்த 192 மாணவிகள் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். நிறைவாக, வந்தவாசி அரசுக்கிளை நூலகர் ஜா.தமீம் நன்றி கூறினார். நூலக உதவியாளர் பு.நாராயணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். படக்குறிப்பு : வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டமும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய தேசிய நூலக வார வாசிப்பு விழிப்புணர்வு விழாவில், 'புத்தக விநாடி -வினா'வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பரிசுகளை வழங்கினார். அருகில், கிளை நூலகர் பூ.சண்முகம், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நூலகர் கே.கலாராணி, உதவி நூலகர் எஸ்.காந்திமதி, அரசுக்கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் உள்ளனர்.

Comments