அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 8,233 பேருக்கு ‘நீட்’ தேர்வுக்கான விரைவு பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 8,233 பேருக்கு ‘நீட்’ தேர்வுக்கான விரைவு பயிற்சி தமிழ், ஆங்கில வழியில் 9 இடங்களில் அளிக்க ஏற்பாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் 8,233 பேருக்கு நீட் தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே விரைவுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு “நீட்” நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதைத்தொடர்ந்து “ஸ்பீட்” என்ற தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சேர தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஆன்லைனில் பதிவு செய்தனர். முதல்கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 100 மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்டு பின்னர் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த மையங்களில் மாணவ - மாணவிகள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 1-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி விட்ட காரணத்தால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு படிப்பது பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கணிதம், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைந்த நிலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி கடந்த 5-ம் தேதி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த 8,233 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விரைவுப் பயிற்சி (Crash course) அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலவழி மாணவர்களுக்கு சென்னை செம்மஞ்சேரி ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களிலும், தமிழ்வழி மாணவர்களுக்கு திருவள்ளூர் அருகேயுள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரி, கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, திண்டுக்கல் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரி, விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி சிவானி பொறியியல் கல்லூரி, கொங்குநாடார் பொறியியல் கல்லூரி ஆகிய 6 இடங்களிலும் இப்பயிற்சி நடைபெறுகிறது. இங்கு மாணவ - மாணவிகள் தங்கியிருந்து பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்வழியில் 6,250 பேரும், ஆங்கிலவழியில் 1,973 பேரும் பயிற்சி பெற உள்ளனர். ஈரோட்டில் தொடக்கம் பிரத்யேகப் பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாணவ - மாணவிகள் அனைவருக்கும் நீட் தேர்வுக்கென ஏற்கெனவே மடிக்கணினி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விரைவுப் பயிற்சியை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஈரோட்டில் வருகிற 9-ம் தேதி (திங்கள் கிழமை) தொடங்கி வைப்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மே 4-ம் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும். நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெற உள்ளது.

Comments