25% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவருக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.180 கோடி அனுமதி தமிழக அரசு அரசாணை வெளியீடு

25% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவருக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.180 கோடி அனுமதி தமிழக அரசு அரசாணை வெளியீடு | இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.180 கோடி வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக மற்ற அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆரம்பநிலை வகுப்புகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, சமூக ரீதியில் நலிவடைந்த, ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த இடஒதுக்கீடு மூலம் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை (அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணம்) கல்வியாண்டு முடிந்தவுடன் அந்த பள்ளிகளுக்கு அரசு வழங்கிவிடும். அந்த வகையில், கடந்த 2015-16 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு ரூ.125 கோடியை அரசு வழங்கியது. இந்நிலையில், 2016-17 கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக ரூ.180 கோடி வழங்குமாறு அரசுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருத்துரு அனுப்பியிருந்தார். இதை ஏற்று தனியார் பள்ளிகளுக்கு ரூ.180 கோடியை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு இந்த தொகை விரைவில் கிடைக்கும்.

Comments