தமிழ்நாடு டிஜிட்டல் நூலக இணையதளம் ரூ. 26 கோடி செலவில் உயர்கல்வித் துறை கட்டிடங்கள் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

தமிழ்நாடு டிஜிட்டல் நூலக இணையதளம் ரூ. 26 கோடி செலவில் உயர்கல்வித் துறை கட்டிடங்கள் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார் | , திருவாரூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.26 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களையும், ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பிலான தமிழ்நாடு டிஜிட்டல் நூலக இணையதளத்தையும் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 7ஆண்டுகளில் 76 புதிய அரசு கல்லூரிகளைத் தொடங்கியதுடன், அரசு கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தேனி மாவட்டம், கோட்டூரில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள நிர்வாக, கல்வியியல் கட்டிடங்களையும், சென்னை, திருவாரூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.26 கோடியில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களையும் முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். ரூ.1.86 கோடியில் அமைக்கப்பட்டுள்ள www.tndigitallilbrary.ac.in என்ற தமிழ்நாடு டிஜிட்டல் நூலக இணையதளத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார். உயர்கல்வித் துறையின் 13 பல்கலைக்கழக நூலகங்கள், அவற்றுடன் இணைந்துள்ள கல்லூரிகள் இணைக்கப்படுவதால் நகர்ப்புற, கிராமப்புற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பயன்பெறுவர்.

Comments