இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளிமாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவர்: பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர் நம்பிக்கை

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெறுவர் என்று பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 3,973 பேருக்கு தமிழக அரசு சார்பில் "நீட்" நுழைவுத்தேர்வுக்கு விரைவு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு, கோவில்பட்டி ஆகிய 3 இடங்களில் ஆங்கில வழியில் 1973 பேருக்கும் திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி (2 மையங்கள்) ஆகிய 6 இடங்களில்2 ஆயிரம் பேருக்கு தமிழ்வழியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த 21 நாள் சிறப்பு பயிற்சி தமிழகம் முழுவதும் 9 மையங்களிலும் நேற்று தொடங்கியது. சென்னையில் இந்த பயிற்சியை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தொடங்கிவைத்தார். இங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவ-மாணவிகள் பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு மடிக்கணினிகளையும் பயிற்சி புத்தகங்களையும் பிரதீப் யாதவ் வழங்கினார். தொடக்க விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.திருவளர்ச்செல்வி, சத்தியபாமா பல்கலைக்கழக இணைவேந்தர் மரியஜீனா ஜான்சன், பல்கலைக்கழகத் தலைவர் மேரி ஜான்சன், துணைவேந்தர் சுந்தர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா முடிவடைந்த பிறகு பிரதீப் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில்,"அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெறுவார்கள்" என்றார்.

Comments