போராட்டத்தில் ஈடுபட்டால் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை ஐகோர்ட்டில், தமிழக அரசு உறுதி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
விடைத்தாள் திருத்தும் பணியின்போது, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்த மாணவி நர்மதா. இவர் சார்பில் அவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தேர்வு முடிவு பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதியுள்ளேன். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அட்டவணையின்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடந்தது. ஏப்ரல் 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் மே 16-ந் தேதி அறிவிக்கப்பட வேண்டும். இதேபோல 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30-ந் தேதியும், 10-ம் வகுப்புத் தேர்வு மே 23-ந் தேதியும் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டம் இந்த நிலையில், விடைத்தாள் திருத்த வேண்டிய ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறப்படுகிறது. இதனால், விடைத்தாள் திருத்தும் பணி தொய்வு ஏற்பட்டு, குறிப்பிட்ட நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளி போகலாம் என்று மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும். அந்த போராட்டம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். சட்டப்படி நடவடிக்கை இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் சி.முனுசாமி, ‘போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்கும். அட்டவணையின் அடிப்படையில் உரிய தேதியில், பிளஸ்-2, 11-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்று உறுதி அளித்து வாதிட்டார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், ஆசிரியர்கள் சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Comments