நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இணையதளம் மூலம் மாற்றுச் சான்றிதழ் பெறலாம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இணையதளம் மூலம் மாற்றுச் சான்றிதழ் பெறலாம்: அமைச்சர் தகவல் | ஈரோடு நந்தா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில், மாணவர்களுக்கு மடிக்கணினி அளிக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ்களை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இணையதளம் மூலமாகப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு, நந்தா பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாமை திங்கள்கிழமை தொடங்கிவைத்தும், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அளித்தும் அமைச்சர் பேசியதாவது: தமிழக மாணவ, மாணவிகள் வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் எந்த ஒரு போட்டித் தேர்வுகள், திறனறித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர் ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆங்கில வழி பயிலும் மாணவ, மாணவிகள் 220 பேருக்கு ஈரோட்டில் மே 5-ஆம் தேதி வரை 21 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி முகாம்களில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது, சுமார் 412 பயிற்சி மையங்களில் பயிலும் 9,000 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும். இப்பயிற்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்கின்றனர். இனிவரும் காலங்களில் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவரவர் பயிலும் பள்ளியில் இருந்தவாறே தலைமையாசியர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த உயர்நிலைக் கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ரூ. 10,000, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 15,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் தங்கள் மாற்றுச் சான்றிதழ்களை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இணையதளம் மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அரசின் நலத்திட்டங்கள் குறித்துப் பேசினார். இதில், ஈரோடு மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (பெருந்துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Comments