1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

1, 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. மீறினால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கேந்திர வித்யாலயா பள்ளிகளில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் 3 பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பில் 8 பாடங்களை பயிற்றுவிக்கின்றனர். இதனால் அப்பள்ளி மாணவர்கள் 7 கிலோ எடை வரை புத்தகப்பைகளை சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு படிப்பு மீதான வெறுப்பு உணர்வு அதிகரிக்கிறது’ என்று கூறியிருந்தார். மேலும், அந்த மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் புத்தகங்களை மட்டுமே தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வாங்க வேண்டும். அதேபோல, அந்த கவுன்சில் உருவாக்கியுள்ள விதிகளை தனியார் பள்ளிகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். அப்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உள்பட எதிர்மனுதாரர்கள் பலர் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- பள்ளி குழந்தைகள் பளுதூக்கும் வீரர்கள் கிடையாது. சந்தோஷமாக விளையாடுவது, ஓடுவது, ஆடுவது போன்றவை குழந்தைகளின் இயற்கையான தகுதிகளாகும். ஆனால், தவறான கல்வி கொள்கைகளால், நினைவில் வைத்துள்ள தகவல்களை தேர்வில் கொட்டி தீர்த்து, தங்களது நினைவாற்றலை நிரூபிக்கும் நிலையில் குழந்தைகள் உள்ளனர். லட்சிய பெற்றோர், அதிக அளவில் கல்வி சுமையை வழங்கும் ஆசிரியர்கள், தேர்ச்சி ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல்படும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றால் அப்பாவி குழந்தைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளனர். மகிழ்ச்சியுடன் கல்வி கற்க வேண்டிய குழந்தைகள், மன அழுத்தத்துடன், ஒருவித பயத்துடன் படிக்கின்றனர். இதனால் குழந்தைகளின் சுதந்திரமான சிந்தனை அழிக்கப்படுமே தவிர, வேறு எந்த ஒரு பயனையும் வழங்கி விடாது. ஆரோக்கியம் சீர்குலையும் குழந்தைகள் இந்த தேசத்தின் சொத்து. அவர்கள் சுதந்திரமாக, பயமின்றி கல்வி கற்க வேண்டும். அப்போது தான் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்கு கிடைக்கும். ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டு, சமூக சிந்தனைகள் உள்ளிட்ட பிற விஷயங்களிலும் உள்ளது. எனவே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள புத்தகங்களை கொண்டு குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டும். தேவையில்லாத பாடங்களை நடத்தினால், அது குழந்தைகளின் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். வீட்டுப்பாடம் கூடாது குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் விதமாக கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறேன். எந்த ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், 1, 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இதை மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலாளர், சி.பி.எஸ்.இ. மண்டல அதிகாரி, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகிகள் சங்கம் உறுதி செய்யவேண்டும். பறக்கும் படை அமைத்தும் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மட்டுமல்லாமல், மாநில கல்வி திட்டத்தின்கீழ் படிக்கும் 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வீட்டு பாடம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரையின்படி 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழி மற்றும் கணிதம் பாடங்களையும், 3 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு, மொழி, கணிதம், சுற்றுச்சூழல் பாடங்களையும் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட வேண்டும். இதை மீறினால் தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள புத்தகங்களை மட்டுமே, தனியார் பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று 2017-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை தீவிரமாக பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும். இதை பறக்கும் படை அமைத்து மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் புத்தகப்பை எவ்வளவு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய, மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கொள்கை முடிவுகளை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை தீவிரமாக அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை 4 வாரத்துக்குள் மத்திய அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்யவேண்டும். கல்வியால், அறிவாற்றல் வளர வேண்டுமே தவிர, மனப்பாடம் செய்யும் ஆற்றல் வளரக்கூடாது. அறிவாற்றலுக்கும், மனப்பாடம் செய்து வைக்கும் திறனுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ, 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பே, ‘கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு கல்வியை போதிக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||