பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு மே 30-ல் வெளியாகிறது

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு மே 30-ல் வெளியாகிறது தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2-க்கு போய்விடலாம் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 30-ம் தேதி வெளியிடப்படுகின்றன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமின்றி, வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்களும் அடுத்து பிளஸ் 2 வகுப்புக்கு சென்றுவிடலாம். வரும் ஜூலையில் நடக்க உள்ள சிறப்பு துணை பொதுத் தேர்வில் அந்தப் பாடங்களை எழுதி வெற்றி பெறலாம் என்று அதிகாரிகள் கூறினர். பிளஸ் 1 தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு வரை பள்ளி அளவிலான சாதாரண வருடாந்திர தேர்வாகவே நடத்தப்பட்டது. இந்த ஆண்டில்தான் முதல்முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். விடைத் தாள் மதிப்பீடு முடிந்து, தேர்வு முடிவு வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டதால், தேர்வு முடிவுகள் எந்த முறையில் வெளியிடப்படும்? மதிப்பெண் சான்றிதழ் தரப்படுமா என மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கேட்டபோது, அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: குறுந்தகவலில் மதிப்பெண் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் போலவே, பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்பப்படும். அரசு தேர்வுத் துறையின் இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேர்வு முடிவு வெளியான பின்னர், அனைத்து மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படும். அவர்கள், பிளஸ் 2 தேர்வை முடித்ததும். இரு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் (Consolidated Marksheet) வழங்கப்படும். ஜூலையில் சிறப்பு தேர்வு தற்போது பிளஸ் 1 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் அடுத்து பிளஸ் 2 வகுப்புக்குச் சென்றுவிடலாம். வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் அந்தப் பாடங்களை ஜூலையில் நடத்தப்படும் சிறப்பு துணை பொதுத் தேர்வில் மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். ஒருவேளை, அந்தத் தேர்விலும் வெற்றி வாய்ப்பை தவறவிட்டாலும்கூட, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும்போது, தனியாக இந்தப் பாடங்களை எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். எனவே, பிளஸ் 1 தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்துவிட்டோமே என்று மாணவர்கள் கவலைப்படத் தேவை இல்லை. தோல்வி அடைந்த பாடங்களை நன்கு படித்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் அனைத்து பாடங்களையும் எழுதி வெற்றி பெற்ற பிறகு, அவர்களுக்கு தொகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments