பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி | பிளஸ்-1 பொதுத் தேர்வில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்தனர். பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் 7-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் , தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர்கள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 648 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள் ஆவர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் நேற்று காலை 9 மணிக்கு அரசு தேர்வுத்துறை இணையதளங்களில் ( www.tnr-esults.nic.in, www.dge.tn.nic.in , www.dge2.nic.in) வெளியிட்டது. முதல் முதலாக அரசு பொதுத் தேர்வாக இந்த வருடம் நடத்தப்பட்டது. இதுவரை பிளஸ்-2 போல 1200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். மேலும் தேர்வு முடிவு வெளியிடும் தேதியையும் பல மாதங்களுக்கு முன்பே அவர் அறிவித்தார். பல கேள்விகள் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அமைந்து இருந்தன. இந்த தேர்வில் மாணவிகள் 94.6 சதவீதம் பேரும், மாணவர்கள் 87.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்-1 பொதுத் தேர்வில் மொத்தம் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 600-க்கு 500-க்கு மேல் பெற்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 380 பேர். அவர்களில் மாணவிகள் 25 ஆயிரத்து 412 பேர், மாணவர்கள் 10 ஆயிரத்து 968 பேர். மொத்தம் உள்ள 7 ஆயிரத்து 70 பள்ளிகளில் 2 ஆயிரத்து 54 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை கண்டுள்ளன. இதில் 188 அரசு பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட உடன் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்களில் அவர்களுடைய தேர்வு முடிவு விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டது. அவர்கள் வீட்டில் இருந்தப்படியே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாக தேர்வு முடிவை பார்ப்பதற்காக பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைந்தது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||