அரசு பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு அமல் சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளின்போது ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை ஒழிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வசதியும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தரமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் தொடர்பாக 24,731 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது மொழிப் பாடங்களில் (தமிழ், ஆங்கிலம்) தாள்-1, தாள்-2 என்றிருப்பதை ஒரே தாளாக மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. சென்னை டிபிஐ வளாகத்தில் ரூ.39 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுக்குமாடிக் கட்டிடம் அமைக்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோ-மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டம் ரூ.9 கோடி செலவில் நிறைவேற்றப்படும். அரசுப் பள்ளிகளில் ரூ.6 கோடியே 23 லட்சம் செலவில் நூலகங்கள் அமைக்கப்படும். மாணவர்கள் தங்கள் பாடங்களோடு திறன்சார்ந்த கல்வி பெறும் வகையில் 2018-19 கல்வி ஆண்டில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை கன்னிமாரா நூலகம் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும். சிறந்த நூலக சேவை வழங்கும் வகையயில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 3 நூலகங்கள் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மாதிரி நூலகங்களாக மேம்படுத்தப்படும். மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு ஒன்றியத் தலைமை இடத்திலும் ரூ.1 கோடி செலவில் ஆதார் சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்படும். மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க, 32 மாவட்டங்களிலும் ரூ.92 லட்சம் செலவில் விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிகள் அமைக்கப்படும். பார்வையற்றோருக்காக மாவட்ட மைய நூலகங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் பேசும் கருவி, பேசும் புத்தகம் உள்ளிட்ட பிரத்யேக வசதிகளுடன் ரூ.96 லட்சம் செலவில் தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும். மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், புதிய படைப்புகளை உருவாக்கவும் அரசுப் பள்ளிகள் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும். நூலகர்களை கவுரவிக்க வழங்கப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். நூலகங்களில் வாசகர்களின் வருகையை அதிகரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும். பாடப்பிரிவுகள் சார்ந்த 5 ஆயிரம் வீடியோ காட்சிகள் தொகுக்கப்பட்டு அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்படும்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||