பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் 11-ம் தேதி முதல் விற்பனை

பிளஸ் 1 பாடப்புத்தகம் ஜூன் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை தமிழ் நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல் கழ கம் மூலம் நேரடியாகவும், அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்கள் மூலமாகவும் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பிளஸ் 1 தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுவிட்டன. தனியார் பள்ளி மாணவர்களுக்காக சென்னை டிபிஐ வளாகத்தில் பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இயங்கிவரும் சிறப்பு விற்பனை கவுன்ட்டரிலும் விற்பனை செய்யப்படுகின்றன. பிளஸ் 2 பாடப் புத்தகங்களை விற்பதற்கென டிபிஐ வளாகத்தில் பிரத்யேக விற்பனை கவுன்ட்டரும் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஆவின் முன்புறம்) இந்த ஆண்டு முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஜூன் 2-வது வாரம் விற்பனைக்கு கிடைக்கும் என பாடநூல் கழகம் அறிவித்திருந்தது. எனினும் டிபிஐ வளாக பாடநூல் கவுன்ட்டரில் தின மும் ஏராளமான பெற்றோர்கள் பிளஸ் 1 புத்தகங்களை வாங்குவதற்காக வந்து செல்கிறார்கள். இதுகுறித்து பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி. ஜெகந்நாதனிடம் கேட்டபோது, ‘‘பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஜூன் 11 முதல் விற்பனைக்கு கிடைக்கும். புத்தகங்களை பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்களிலும் வாங்கலாம். பள்ளி நிர்வாகத்தினர் மட்டுமின்றி மாணவ, மாணவிகளும் ஆன் லைன் (www.textbookcorp.in) மூலமாக பதிவுசெய்தும் அஞ்சல்துறை பார்சல் சேவை, கூரியர் சேவை வழியாகவும் பெறலாம்’’ என்றார்.

Comments