எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய ஒதுக்கீடு ஜூலை 10-ல் 2-ம் கட்ட கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய ஒதுக்கீட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 10-ம் தேதி தொடங் குகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு ஒதுக்கப்பட் டுள்ளன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கடந்த 20, 21-ம் தேதிகளில் நடத்தியது. ஆன்லைன் கலந்தாய்வில் கலந்து கொண்ட 12,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இடங்களை தேர்வு செய்தனர். அவர்கள் ஜூலை 3-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 10, 11-ம் தேதிகளில் நடக்க உள்ளது. அதற்கான பதிவு ஜூலை 9-ம் தேதி தொடங்குகிறது.

Comments