இந்த ஆண்டு 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் சைக்கிள் வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
மானிய கோரிக்கை விவாதம்

சட்டசபையில் நேற்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் நந்தகுமார் (அணைக்கட்டு தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

நந்தகுமார்:- பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஊதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்கள் நலன்காக்க தொழிலாளர் நலத் துறையால் அமைக்கப்படும் முத்தரப்புக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை.

அமைச்சர் நிலோபர் கபில்:- பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.33.60 வழங்கப்படுகிறது. முத்தரப்பு குழுவை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலைகளில் முழுக்க முழுக்க பெண் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். அரசு நடத்தும் பஞ்சாலைகளில் ஊதிய பிரச்சினை எதுவும் இல்லை. அங்கு பணிபுரியும் பெண்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

மத்திய மந்திரிக்கு கடிதம்

நந்தகுமார்:- சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசும் அதை வலியுறுத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்றுதான் நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். நானும் அத்துறையை சார்ந்த மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

நந்தகுமார்:- அதேபோல், சென்னை ஆவடியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை தொடர்ந்து நடத்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

அமைச்சர் க.பாண்டியராஜன்:- ராணுவ வீரர்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில், ஆவடியில் உள்ள ஆலையில்தான் உற்பத்தி திறன் அதிகம். அங்கு ஆள் குறைப்போ, அதை தனியார் மயமாக்குவதோ இல்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்து பூர்வமாக உறுதியளித்து இருக்கிறார். அங்கு பணிபுரியும் 2 ஆயிரம் தொழிலாளர்களின் பணி பாதுகாக்கப்படும்.

நல வாரியத்தில் சேர்ப்பு

நந்தகுமார்:- வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணிபுரிய வரும் தொழிலாளர்களில் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களை கண்காணிப்பது யார்?.

அமைச்சர் நிலோபர் கபில்:- வெளிமாநிலங்களில் இருந்து வரும் கட்டுமான தொழிலாளர்கள், அதற்கான நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். இதுவரை 17,949 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நந்தகுமார்:- 2016-ம் ஆண்டு திருச்சியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 11 தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். அந்த தொழிற்சாலைக்கு அனுமதியளித்த அரசு அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்?.

அமைச்சர் நிலோபர் கபில்:- அந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த ஆலை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சைக்கிள்

நந்தகுமார்:- கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில்தான் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இலவச சைக்கிள் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படவே இல்லை.

அமைச்சர் மணிகண்டன்:- இதுவரை 38 லட்சத்து 32 ஆயிரத்து 602 மாணவர்களுக்கு ரூ.5,600 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மடிக்கணினி வாங்குவதற்கான டெண்டர் முடிந்த நிலையில், சில நிறுவனங்கள் கோர்ட்டுக்கு சென்றதால் மடிக்கணினி வழங்க இயலவில்லை.

அமைச்சர் வளர்மதி:- கடந்த ஆண்டு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படவில்லை என்று உறுப்பினர் குறிப்பிட்டார். சைக்கிள் தயாரித்து வழங்கிட 4 நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. ஆனால், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், சைக்கிள் கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு 11 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன. கடந்த ஆண்டு விடுபட்டதற்கும் சேர்த்து இந்த ஆண்டு வழங்கப்படும்.

நந்தகுமார்:- கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது கல்லூரி படிப்புக்கு சென்றுவிட்டார்கள். அவர்களுக்கு எப்படி சைக்கிள் வழங்க முடியும்?.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- இந்த ஆண்டு 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் சைக்கிள் வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Comments