நிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் குழு: நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்

நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் ஆண்டு கட்டணமாக ரூ. 18 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு, சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கும் உரிய கட்டணத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். ஒருவேளை கல்விக் கட்டணக் குழு அதிகமான தொகையை நிர்ணயித்தால் எஞ்சிய தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும். ரூ.13 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் மீதித் தொகையை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள், எம்பிபிஎஸ் படிப்புக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை யுஜிசி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. குழு அமைப்பு: இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது யுஜிசி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.ஆர்.பி.கோபிநாதன், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க 11 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் ஆர்.சி.தேகா நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக லக்னௌ மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூராமணி கோபால் உள்ளிட்ட 10 பேர் உள்ளனர். இந்தக் குழு 4 மாத காலத்துக்குள் கட்டண நிர்ணயம் குறித்து பரிந்துரைக்கும்' எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 31 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

Comments