பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு நாளை முதல் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்த மாதம் சிறப்பு துணைத் தேர்வு நாளை முதல் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதற்கு நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:- கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதாதவர்களுக்கு ஜூலை மாதம் சிறப்பு துணை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு ஜூலை 5 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஜூன் 7 முதல் 11-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. விதிமுறைகள் பொதுத்தேர்வின்போது செய்முறைத்தேர்வில் பங்கேற்காமல் எழுத்துத்தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்துத்தேர்வு மற்றும் அகமதிப்பீட்டில் 35 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் உடனடி சிறப்பு துணைத்தேர்வின்போது செய்முறைத்தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. அவர்கள் எழுத்துத்தேர்வை மீண்டும் எழுத இயலாது. செய்முறைத்தேர்வில் கலந்துகொள்ளாமல் எழுத்துத்தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்துத்தேர்வு மற்றும் அகமதிப்பீட்டில் மொத்தம் 35 மதிப்பெண்ணுக்கும் குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் உடனடி சிறப்பு துணைத்தேர்வின்போது எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு இரண்டிலும் பங்கேற்க வேண்டும். செய்முறைத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்கள், எழுத்துத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. அவர்கள் மீண்டும் செய்முறைத்தேர்வை செய்ய வேண்டியதில்லை. கட்டணம் எவ்வளவு? தேர்வுக்கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 சேர்த்து பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் தேர்வு மையம் குறிப்பிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments