தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,450 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவிப் பொறியாளர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர் என 2 ஆயிரத்து 450 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று பேரவையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 150 உதவிப் பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), 25 உதவிப் பொறியாளர் (சிவில்), 25 உதவிப் பொறியாளர் (இயந்திரவியல்), 250 இளநிலை உதவியாளர் (கணக்கு), கோவை மற்றும் ஈரோடு மண்டலத்துக்கு மொத்தம் ஆயிரம் கள உதவியாளர் மற்றும் பிற மண்டலங்களுக்கான ஆயிரம் கள உதவியாளர் பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன, இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள். விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்புப் பெறும் வகையில் விரைவு (தத்கால்) மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், 7.5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம், 10 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இந்தாண்டு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையங்களை நிறுவுவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் சூரிய மின் உற்பத்தி செய்து சொந்தப் பயன்பாட்டுக்கும், மின் வாரியம் மற்றும் பிறருக்கும் விற்பனை செய்ய உதவி அளிக்கப்படும். சொந்த நிலங்கள் உள்ள பல்கலைக்கழகங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள், அறக்கட்டளைகள், கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சங்கங்கள் அதிகபட்சம் 5 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படும். . டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ.750, ரூ.600, ரூ.500 என உயர்த்தி, வரும் செப்டம்பர் முதல் வழங்கப்படும். டாஸ்மாக்கில் பணியாற்றும் சில்லறை விற்பனைப் பணியாளர் மரணம் அடையும்போது அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

Comments