வெயிட்டேஜ் வேறுபாடு களையப்படும் | ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி | ஆசிரியர்களுக்கு பயிற்சி | அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி...

நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே?

பதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

கேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்கள் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.மாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் கற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த ஆண்டு 3 ஆயிரம் பள்ளிகள். வருகிற ஆண்டில் 2 ஆயிரத்து 200 பள்ளிகள் என 5 ஆயிரத்து 200 பள்ளிகளில் ஸ்மார்ட் ‘கிளாஸ்’ கொண்டு வர திட்டங்கள் இருக்கிறது. ஐ.சி.டி. என்று சொல்லப்படுகிற 9, 10, 11, 12-ம் வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒருங்கிணைந்து அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

கேள்வி:- ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும்?

பதில்:- அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு மட்டும் பேராசிரியர்கள் மூலம் குழுக்களை அமைத்து அடுத்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் 15 நாட்கள் ஆகும்.

கேள்வி:- ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று முதல் மதிப்பெண், 2-வது மதிப்பெண் பெற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனரே?

பதில்:- ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு நமக்கு கிடைத்த அவகாசம் 4 மாதங்கள் தான். இந்த ஆண்டு முழுமையாக இருக்கிற போது, 2 ஆண்டு காலம் பயிற்சிகள் தேவை இல்லை. ஓராண்டு காலத்திலேயே முழுப்பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு 40 சதவீதம் நீட் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெற்றுள்ளது. எனவே ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றிவாகை சூடும் நிலை தமிழகத்தில் உருவாகும்.

கேள்வி:- ‘நீட்’ தேர்வை ஆன்-லைன் மூலம் எழுதும் முடிவை தமிழக அரசு ஏற்குமா?

பதில்:- மத்திய அரசு திடீரென்று கொண்டு வருகிற திட்டங்கள், எங்களிடம் வரும்போது அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

கேள்வி:- ‘வெயிட்டேஜ்’ முறையில்...

பதில்:- 2013-ம் ஆண்டு வெயிட்டேஜ். 2017-ம் ஆண்டு வெயிட்டேஜ் வேறுபாடு இருக்கிறது. அன்றைய மதிப்பெண் வேறு. இன்றைய மதிப்பெண் வேறு. ஆகவே தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ரெ.இளங்கோவன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனர் க.அறிவொளி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments