பிளஸ் 2 முடித்தாலே வேலைவாய்ப்பு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

பிளஸ் 2 முடித்தாலே வேலைவாய்ப்பு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தமிழகத்தில் பிளஸ் 2 முடித்தாலே மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். தென்னிந்திய மண்டல பட்டயக் கணக்காளர்களின் 6 -ஆவது மாநாடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: இந்தியாவில் பொறியியல் படித்து விட்டு 80 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 1.6 லட்சமாக உள்ளது. அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையைக் கட்டுப்படுத்தும் வகையில், மாணவர்கள் பிளஸ் 2 முடித்தாலே வேலைவாய்ப்பு பெறும் அளவுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 75 இடங்களில் சி.ஏ. பயிற்சி: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் அமைப்பின் உதவியுடன் 14 மாவட்டங்களில் பட்டயக் கணக்காளர் படிப்பு கற்றுத் தரப்படும். இந்த மாணவர்களுக்கு சி.ஏ. முடித்த ஆடிட்டர்கள் பயிற்சியை வழங்குவர். 75 இடங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அதன் மூலம் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறவுள்ளனர். இந்தியாவிலேயே இந்த ஒப்பந்தம் முதல்முறையாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழாண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். 4 வார கால பயிற்சியின் மூலம் இந்த ஆண்டு 1,412 மாணவர்கள் நீட் தேர்வி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலான அரசுப் பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து பயிற்றுநர்கள் வரவுள்ளனர். ஜூலை மாதம் முதல் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். புதிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு டிபிஐ வளாகத்தில் 10 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

Comments