குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்

குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வுச்களுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் 2-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. இதனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்பார்த்து படித்து வரும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வு ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான தனித்தனி அறிவிப்புகள் வெளியாகும். அதேபோல், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வைப் பொருத்தவரையில், பல்வேறு துறைகளில் இருந்து இன்னும் காலியிடங்கள் வரவேண்டியுள்ளது. தற்போது எந்த முறையில் குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறதோ அதேமுறையில்தான் அடுத்துவரும் தேர்வும் நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. (தற்போது குரூப்-2 தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு ஆகிய 2 தேர்வுகள் உள்ளன) இவ்வாறு நந்தகுமார் கூறினார். பட்டப் படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வானது, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உட்பட சார்நிலைப் பணிகளில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படுகிறது.

Comments