நீட் தேர்வில் 400-க்கு மேல் பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு வாய்ப்பு

நடப்பு ஆண்டு மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வில் 400-க்கு மேல் பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு வாய்ப்பு எஸ்சி, எஸ்டி கட்-ஆஃப் 145-150 வரை இருக்கலாம். நடப்பு ஆண்டு நீட் தேர்வில் 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 3,050 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக எஞ்சியுள்ள 2,594 இடங்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 783 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாயின. அகில இந்திய அளவில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 289 பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 45,336 பேர். தகுதி மதிப்பெண் குறைப்பு நீட் தேர்வில் மொத்த மதிப்பெண் 720 ஆகும். தகுதி மதிப்பெண் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைக்கப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 131-ல் இருந்து 119 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி) 107-ல் இருந்து 96 ஆகவும் குறைக்கப்பட்டது. தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 32,368 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 45,336 ஆக அதிகரித்துள்ளது. இதனால், நீட் தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரியில் அல்லது தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும் என்று மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கணக்குப் போட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு நிலவரம் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் 374 ஆகவும் அதிகபட்சம் 590 ஆகவும் இருந்தது. பிசி வகுப்பில் 295 முதல் 575 வரை கட்-ஆஃப் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்தது. எம்பிசி பிரிவில் 235 முதல் 577 வரை எடுத்தவர்களும், எஸ்சி பிரிவில் 191 முதல் 573 வரை பெற்றவர்களும், எஸ்டி பிரிவில் 171 முதல் 502 வரை எடுத்தவர்களும் சேர முடிந்தது. ஜூன் 11-ம் தேதி முதல்.. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் 11-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. கலந்தாய்வை ஜூலை 1-ம் தேதி தொடங்க மருத்துவ தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தோராயமாக எவ்வளவு கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலும் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 560 வரை வரலாம் அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு (15 சதவீத இடங்கள்) கட்-ஆஃப் மதிப்பெண் 560 வரை வரலாம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பொதுப் பிரிவில் 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும், பிசி வகுப்பில் 320-க்கு மேல் பெற்றிருப்பவர்களுக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொதுப் பிரிவில் 310-க்கு மேலும், பிசி பிரிவில் 290-க்கு மேலும் கட்-ஆஃப் மதிப்பெண் வரலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 145 முதல் 150 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments