ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஆசிரியர் பணிமாறுதல் ரத்து விவகாரத்தில் அமைச்சரின் விளக்கத்தால் குழப்பம்

ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஆசிரியர் பணிமாறுதல் ரத்து விவகாரத்தில் அமைச்சரின் விளக்கத்தால் குழப்பம் , சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கூடுதல் ஆசிரியர்கள் பணியில் இருப்பதால், ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டு நடைபெறும் ஆசிரியர் பணி பொதுமாறுதல் கலந்தாய்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடம் அதிகம் உள்ளதால், கலந்தாய்வின்போது வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் பெறுவதைத் தவிர்க்கும் வகையில், இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சமநிலை உறுதி செய்யப்படும் மேலும், பிற மாவட்டங்களில் இருந்து இந்த 8 மாவட்டங்களுக்கு ஆசிரியர் பணி மாறுதல் வழங்குவதன் மூலம், மாநிலம் முழுவதும் நிலவும் காலிப்பணியிடங்களில் ஒரு சமநிலை உறுதி செய்யப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்தாய்வை புறக்கணித்துள்ள ஆசிரியர்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவுக்கு நேர்மாறாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். 8 மாவட்டங்களில் ஆசிரியர் பணிமாறுதல் ரத்து தொடர்பாக ஈரோட்டில் பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘8 மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஏற்கெனவே கூடுதலாக ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது, மேலும் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க முடியாது. வடமாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதை அரசு உணர்ந்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதோ அங்கு மட்டும் பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றார். 8 மாவட்டங்களில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு, இந்த மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்கெனவே அதிகமாக இருப்பதே காரணம் என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ள நிலையில், இந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளது ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 8 மாவட்டங்களிலும் உள்ள காலிப்பணியிட விவரங்களை வெளிப்படையாக அறிவித்து முறைப்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments