பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பணி கோரி மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பணி வழங்கக்கோரி மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். விரிவுரையாளர் தேர்வு தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் கலந்து கொண்டனர். 2011 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். இவர்களில் 196 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி தேர்வை ரத்து செய்தது. இதை எதிர்த்து தேர்வு எழுதிய சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘விரிவுரையாளர் தேர்வு முறைகேடு சம்பந்தமாக தமிழக அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளது. அதில், 196 பேரின் விடைத்தாளில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது சரியானது தான்’ என்று தீர்ப்பு கூறினார். மாறுபட்ட தீர்ப்பு இதே போன்று மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘இந்த தேர்வில் 196 பேரின் மதிப்பெண்ணில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு பணி வழங்க வேண்டும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார். இந்த மாறுபட்ட தீர்ப்புகளை தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். பணி வழங்க வேண்டும் அந்த மனுவில், ‘முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி மொத்தமாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு நடந்த தேர்வையே தமிழக அரசு ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. இந்த தேர்வில் 196 பேரின் மதிப்பெண் பட்டியலில் வித்தியாசம் உள்ளது என்பதற்காக தேர்ச்சி பெற்ற எங்களையும் மீண்டும் தேர்வு எழுதச்சொல்வதில் நியாயம் இல்லை. எனவே, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எங்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறி உள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Comments