ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு விரைவில் நல்ல முடிவு பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை தொடர்பாக அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கவேண்டியது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. அப்போது, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, ‘‘2014-க்குப் பின்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒரு ஆசிரியர்கள் கூட தேர்வு செய்யப்படவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படாததால், அவர்களால் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கூட சேர முடியாத நிலை உள்ளது. மேலும், உதவிக் கல்வி அதிகாரி, வேளாண் பயிற்றுநர், கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. முடிவுகளுக்காக காத்திருப்பு ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தற்போது பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறையால், தகுதியான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும். சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். முடிவுகளை வெளியிட வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது: கடந்த 2012-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 42,724 பேர் தேர்ச்சி பெற்றனர். அதே போல் பட்டதாரி ஆசிரியர்கள் 52,646 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 34,056 பேர் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள 61,314 பேருக்கும் 7 ஆண்டுகள் அவகாசம் உள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது, ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான தகுதித்தேர்வு மட்டுமே. இவர்களுக்கு தகுதிச் சான்று வழங்க முடியுமே தவிர அத்தனை பேருக்கும் வேலை வழங்குவது அரசின் கடமை கிடையாது. சிறப்பாசிரியர்களைப் பொறுத்தவரை, விரைவில் அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு. பணி ஆணை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்த நிகழ்ச்சியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். காவல்துறையில் அது தொடர்பான விஷயங்களை ஒப்படைத்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். தற்போது 7 ஆண்டுகள் அவகாசம் உள்ளதால், அவர்கள் மீண்டும் அந்த தேர்வை வெயிட்டேஜ் இல்லாமல் எழுதுவது தொடர்பான விஷயம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Comments