சென்னை பல்கலைக்கழகம் சார்பில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்துகிறது

பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து பல்கலைக்கழகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக் கழகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து, அனைத்து போட்டித் தேர்வு களுக்கும் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த உள்ளது. இப்பயிற்சி மூலம் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். எதிர்வரும் எஸ்எஸ்சி பட்டதாரி நிலையிலான முதல்நிலை தேர்வுக்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காக போட்டித்தேர்வுக்கான முன் ஆயத்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த முன் ஆயத்தப் பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும், சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்க உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் உரிய கல்வி சான்றிதழ்களுடன், ஜூன் 29-ம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் வழிகாட்டும் மைய இயக்குநர் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது) , சாந்தோம் என்ற அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments