மருத்துவ மாணவர் சேர்க்கை - விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிகிறது.

2017-18-ம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை- விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிகிறது. இதுவரை 36,000 விண்ணப்பங்கள் விற்பனையானது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்துகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.1,000-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும் நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் பெற்றுச் செல்கின்றனர். அரசு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் நகல் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்று வருகின்றனர். இதுவரை சுமார் 36,859 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் விண்ணப்ப விநியோகம் வரும் 18-ம் தேதி (நாளை) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Comments