மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு.

மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக் கான தரவரிசை பட்டியல் (வியாழக் கிழமை) வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. மேலும் 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர பல் மருத்துவ இடங்கள் 1,020 உள்ளன. இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்பட்டது. 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்து சேர்ந்தன. தரவரிசை பட்டியல் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 41 மையங்களில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தில் மட்டும் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது. தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு உத்தேசமாக ஜூலை 7-ந் தேதி தொடங்கப்படுகிறது.

Comments