தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேர முடியாது ஸ்டாலின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேர முடியாது ஸ்டாலின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில் சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. மாநில உரிமையைப் பறிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வில், கேள்வித்தாளில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது இருப்பிடச் சான்று விஷயத்தில், வெளி மாநில மாணவர்கள் இங்கு வந்து சான்று பெற்று படிக்கும் நிலை உருவாகியுள்ளது. விதிமுறைகள் கடுமையாக்கப்பட்ட பிறகும் சிலர் ஆட்களைப் பிடித்து, சான்றிதழ் பெற்றுள்ளதாக தகவல் வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய 2 மசோதாக்கள், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதா? என்பதை தெரிவிக்க வேண்டும். குடியரசுத் தலைவருக்கு அந்த மசோதாக்கள் அனுப்பப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான டி.கே.ரங்கராஜனுக்கு இதுதொடர்பாக தகவல் வந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகத்தில் மத்திய ஒதுக்கீடு தவிர 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன. இருப்பிடச் சான்றைப் பொறுத்தவரை தற்போது தெளிவாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பிற மாநில மாணவர்கள் இங்கு வந்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியாது. வெளி மாநிலத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள், இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருந்தால், அவர்களுக்கு நீட் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒருவேளை பிற மாநில மாணவர்கள் அங்கும், இங்கும் விண்ணப்பித்திருந்தால், கண்டறிந்து ரத்து செய்யப்படும். இதையும் மீறி தவறு செய்தால் காவல் துறையுடன் இணைந்து வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. மசோதா நிறுத்திவைப்பு மசோதாவைப் பொறுத்தவரை, அவை ‘வித் ஹெல்டு - நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது’ என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ளது. இதுதொடர்பான தகவலை கோரியுள்ளோம்.

Comments