எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசே கலந்தாய்வு நடத்துகிறது தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 457 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,593 இடங் கள் (85 சதவீத) மாநில அரசுக்கு உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 30 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 170 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசுக்கு இருக்கின்றன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு சுமார் 800 எம்பிபிஎஸ் இடங்கள், 1,000 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. இவை தவிர தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு சுமார் 600 எம்பிபிஎஸ், 700 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. வரும் 18-ம் தேதி வரை... இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு என்று தனித்தனியாக விண்ணப்பகள் விற்பனை செய்யப்பட உள்ளன. தனித்தனி விண்ணப்பம் அரசு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என இரண்டுக்கும் விண்ணப்பிப் பவர்கள் தனித்தனி விண்ணப்பத்தை வாங்கி விண்ணப்பிக்க வேண்டும். அரசு இடங்களுக்கு 45,000 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப் பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தரவரிசைப் பட்டியல் தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்த உள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையும் நடக்க உள்ளது.

Comments