ஒருங்கிணைந்த தமிழ்த் தேர்வு மாணவர் மொழித் திறனை பறிக்கும்

ஒருங்கிணைந்த தமிழ்த் தேர்வு மாணவர் மொழித் திறனை பறிக்கும் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கருத்து. மேனிலை வகுப்புகளில் ஒருங்கிணைந்த தமிழ்த் தேர்வு என்பது மாணவர்களின் மொழித் திறனைப் பறித்து விடும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் மேனிலை வகுப்புகளில் ஒருங்கிணைந்த தமிழ்த் தேர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன இயக்குநர் கோ.பெரியண்ணன் இதற்கு தலைமை வகித்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராஜேந்திரன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னாள் துணைவேந்தர் ம.இராஜேந்திரன் பேசும்போது, “மேனிலை வகுப்புகளில் மொழிப் பாடத் தேர்வை ஒரே தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படைப்புத்திறன், படைப்பாளுமை மங்கி விடும். நமது மொழியை ஒழித்து விட்டு மூன்றாவதாக ஒரு மொழியை திணிப்பார்கள். இந்த மும்மொழித் திட்டத்தில் இந்தி வர வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்றார். இந்த கருத்தரங்கின் நிறைவாக ஒருங்கிணைந்த தமிழ்த் தேர்வு அரசாணையைத் தவிர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments