தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு இலவச ‘நீட்’ பயிற்சி துணைவேந்தர் தகவல்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்க எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களுக்கு அடுத்த மாதம்(ஜூலை) முதல் இலவச ‘நீட்’ பயிற்சி அளிக்கப்படும் என்று துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:- பாடத்திட்டம் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியபடி மருத்துவ கல்வியில் பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது. இந்த பாடத்திட்டத்தில் எப்படி மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது, எவ்வாறு பயிற்சி அளிப்பது, அதற்கான விடைத்தாள்களை எப்படி மதிப்பீடு செய்வது என்பது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் ஒவ்வொரு துறைக்கான கூட்டமும் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் இந்த கூட்டம் 8 மாதங்களுக்கு மேல் நடத்தப்பட்டது. பின்னர் 2017-18-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். மற்றும் உயர் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் உலகத் தரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன. விடைத்தாள் மதிப்பீடு மாணவ-மாணவிகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் ஏற்றி அதை மருத்துவ ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வார்கள். தினமும் 35 விடைத்தாள்களை மதிப்பீடு செய்வார்கள். இந்த முறை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நோயாளிகளிடம் எப்படி பேசவேண்டும், அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது, ரோபோட்டிக் முறையை எதில் பயன்படுத்தலாம் என்பது உள்பட மருத்துவ நெறிமுறை என்ற பாடத்தை அமல்படுத்தி உள்ளோம். புதிய நோய்களை மருத்துவர்கள் எப்படி கண்டுபிடித்து நோயாளிகளுக்கு எப்படி மருந்து வழங்கவேண்டும் என்பது உள்பட பலவற்றிலும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடர் மருத்துவ கல்வி நடத்தப்படுகிறது. பிஎச்.டி பட்டம் மருத்துவ மாணவர்களுக்கு மட்டும் இந்த பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. ஆராய்ச்சி பட்டம் வழங்கப்பட்டு வந்தது. இனி எம்.எஸ்.சி. தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் படித்தவர்களும் தரமாக ஆராய்ச்சி செய்து இந்த பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி.பட்டம் பெறலாம். மேலும், இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். மேலும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் நிறைய உள்ளன. அந்த படிப்புகளை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அவற்றை படித்தால் வேலைவாய்ப்பு உறுதி. உடனே ஆஸ்பத்திரிகளில் வேலைகிடைக்கும். பல்கலைக்கழகம் மாணவர்கள் நலன் கருதி, அண்ணா பல்கலைக்கழகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, ஆஸ்திரேலியா மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பலவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இலவச ‘நீட்’ பயிற்சி மருத்துவ பட்டமேற்படிப்பு படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு அவசியம். எனவே எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி இலவசமாக தொடங்கப்பட உள்ளது. அதாவது இந்த பயிற்சி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் அடுத்த(ஜூலை) மாதம் முதல் நடத்தப்பட உள்ளது. கல்வித்தரம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வழங்கப்படும் ‘நாக்’ என்ற அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க உள்ளோம். உலகத் தரத்திற்கும் விண்ணப்பிக்க இருக்கிறோம். இவ்வாறு டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.

Comments