பாடத்திட்டங்களில் கி.மு., கி.பி. முறையே தொடரும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் இன்பத்துரை, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் பாடத்திட்டங்களில் கி.மு., கி.பி. என்பதற்கு பதிலாக பொ.ஆ.மு. (பொது ஆண்டுக்கு முன்), பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு பின்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘எப்போதும் போல் கி.மு, கி.பி. என்ற முறையே தொடரும்’ என்றார். கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் சார்பில் பல்வகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்கப்படுமா? என்றும், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் சுற்றுப் பிரகாரத்தை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘2011-2012-ம் ஆண்டிலேயே பல்வகை தொழில் நுட்ப கல்லூரி தொடங்க அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இருப்பினும், உறுப்பினர் குறிப்பிட்டதை முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று, தொழில் நுட்ப கல்லூரி தொடங்க மீண்டும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மேலும் திருச்செந்தூர் கோவிலில் சுற்றுப்பிரகாரம் பழைய நிலையிலேயே பழமை மாறாமல் கல் கட்டிடம் கட்டுவதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும்’ என்றார்.

Comments