மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஐகோர்ட்டு உத்தரவு

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. போலி சான்றிதழ் சென்னை ஐகோர்ட்டில், மாணவி விக்னயா உள்பட 7 பேர் தொடர்ந்த வழக்கில், ‘வெளி மாநில மாணவர்கள் தமிழகத்தில் வசிப்பது போல போலி இருப்பிட சான்றிதழை பெற்று, தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்கின்றனர். இதனால், தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வெளி மாநில மாணவர்கள் கொடுத்த போலி இருப்பிட சான்றிதழின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது. ஏப்ரல் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது. தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், பிற மாநிலங்களிலும் மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்து உள்ளனரா? என்ற விவரத்தை சரிபார்த்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆதார் கட்டாயம் இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், ‘தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளவர்கள், இந்தியா முழுவதும் உள்ள பிற மாநிலங்களில் விண்ணப்பித்து உள்ளனரா? என்பதை கண்டுபிடிப்பது கடினமான காரியம். அதே நேரம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் விண்ணப்பித்து உள்ளார்களா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும்’ என்றார். இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் மாநில ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் உண்மையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தானா? என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். எனவே, மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும், கட்டாயமாக அசல் ஆதார் அடையாள அட்டையையும், அதன் நகலையும் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் போலி இருப்பிட சான்றிதழுடன் வரும் வெளிமாநில மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மாநில இடஒதுக் கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ப்பதை தடுக்க முடியும். குறுஞ்செய்தி எனவே, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்து உள்ள அனைத்து மாணவர்களுக்கும், ஆதார் அடையாள அட்டையுடன் வரும்படி தகவல் தெரிவிக்க வேண்டும். இணையதளத்திலும், பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாகவும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதவிர, அந்த மாணவர்களின் செல்போன்களுக்கு, குறுஞ்செய்தியும் அனுப்ப வேண்டும். இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments